Friday, February 19, 2010

ஒன்று பட்டால்

வந்தோரை வரவேற்கும் பண்பாளன் தமிழன்
படமெடுத்தால் பாம்படியான் அது பாவம்

பாவமென்றால் கொத்தவிடு அது செய்யான்

அடிப்பவன் அடித்திடட்டும் அதுவரை தூர நிற்பான்

வீர மரபினரை விரதமென்றும் யாகமென்றும்

பூஜைக்குள் தோய்த்தெடுத்து மூழ்கவைத்தான் ஆரியன்

வருடமெல்லாம் வழிபாடு சிந்திக்க நேரமில்லை

பாரினிலே உள்ளதெல்லாம் பார்க்காமல் ஏற்றிடுவான்

நல்ல மனம் உள்ளதினால் உன்னைப்பலர் ஏய்த்திடுவார்

நம்பி நம்பி கெட்டது தான் நம்முடைய வரலாறு



என்னினமே தமிழினமே நீ ஒரு கண்ணாடி

இன்றல்ல நேற்றல்ல நீ எப்போதும் கண்ணாடி

முன் நிற்போன் உன்னில் தன் முகம் பார்ப்பான்

உன்னை நீ பார்ப்பதில்லை அறிவாயோ ? எப்போதும்

உந்தனது வரலாற்றில் நீ ஓரணியில் நின்றதுண்டா?

எண்ணிப்பார் எட்டப்பன் ,காக்கையன் ,கருணாகம்

இப்படித்தான் வரலாறு ஓடோடிப் போகிறது



வெற்றியும் தோல்வியும் வீரர்க்கு உண்டெல்லோ

உலகமே ஒன்றாகி ஒரு பக்கம் நின்றிட்டால்

கொக்கும் கறுப்பாகும் காகம் வெளுப்பாகும்

இதிலென்ன புதிருண்டு இதுதானே வரலாறு

நம் பெருமை நாம் பேசி நமக்கேதும் வந்ததுண்டோ?

காலமென்னும் போகவில்லை களநிலமை மாறவில்லை

நீ இன்று முடிவை எடு ஓரணியில் ஒன்றுபடு

தேசியத்தைக் கையிலெடு சுயநலத்தைக் கொன்றுவிடு

தெளிவான வழிவந்த வரலாறு உன் அருகுண்டு

அழகான தேசத்தின் தெளிவான படமுண்டு

அதை வைத்து போராடு பணியாது வாதாடு



ஒன்றல்ல பத்தல்ல ஆயிரமாய் வீழ்ந்த இனம்

படுகுழிகள் காயவில்லை பத்து மாதம் ஆகவில்லை

எவருக்கும் பணியாதே எம் மனமெல்லாம் வித்துண்டு

மரமாகப் போகிறது எரிமலையாகப் போகிறது

நல்ல மரம் தான் வேண்டும் நரிகளுக்கு இடமில்லை

இது தமிழ் நாட்டு தேர்தலல்ல பிரபாவின் வீர இனம்

நடந்திட்ட தேர்தலின் நயமான பாடமிது

மீண்டும் வருகிறது ஒன்றுபட்டால் வென்றிடலாம்



உலகத்தின் மாந்தர்க்கு இப்ப நல்ல தெளிவுண்டு

எல்லோரும் நம் பக்கம் நாள் போனால் மறந்திடுவார்

நம்மில் தான் தெளிவில்லை நாலாகப் பிரிகின்றார்

கேட்காமல் கிடைப்பதில்லை தட்டாமல் திறப்பதில்லை

ஒன்றாகி நில்லுங்கள் உரிமைக்காய் குரல் கொடுங்கள்

உணர்வாகி மக்களெல்லாம் உம்மோடு நின்றிடுவார்

2 comments:

Keddavan said...

புரட்ச்சிப்புயலாக வீசுகின்றது உங்கள் கவிதை கணைகள்...

வான்முகில் said...

ரஜீவன் அவர்களே உங்கள் கருத்துக்கு ந்ன்றிகள், புயல் தொடர்ந்து வீசும்.

Post a Comment

yasmin lawsuit