
கருணையின் வடிவைக் காட்டியே நின்றவர்
போதி மரத்தடியில் ஞானத்தைப் பெற்றவர்
கொல்லாமை என்பதை கூவியே சொன்னவர்
பல கோடி மக்கள் தொழுகின்ற கடவுள்-புத்தன்
ஆயிரம் மார்க்கங்கள் அவனியில் இருந்தாலும்
கருணைக்கு ஈடாக பௌத்தம் போல் பாரிலில்லை
கொல்லாமை தொடக்கம் கள் உண்ணாமை வரை
மனித மாண்பு பல மலை போல அதிலிருந்தும்
அவை மறைந்து பல நாளாச்சு மரணித்து போயாச்சு
சித்தாத்தர் எனும் புத்தனின் பிள்ளைகள்
புத்தரை மறந்தார் அவர் தம் போதனை துறந்தார்
நித்தமும் உயிகளைக் கொத்தியே தின்றார்
வற்றாத வெறியுடன் வாழுடன் நின்றார்
சித்தாத்தர் பாவம் கல்லாகிப்போனாரோ?
உட்கார்ந்த இடத்தில் ஊரை பிடிப்பாரோ?
இல்லைஉலகினை ஏமாற்றி உதிரம் குடிப்பாரோ?
வளம் பல வழிந்தோடும் வன்னிப் பெருநிலமே
வந்தோரை வரவேற்று வாழ வழி தந்தவள் நீ
பண்பாடு மொழியெல்லாம் பாழ்பட்டுப் போனவேளை
பக்குவமாய் காத்ததனை பறைசாற்றி நின்றவளே
வலிகள் பல சுமந்தும் வணங்காத மண்ணாகி
வரலாற்றுப் பொன்னேட்டில் நீ வாழ்வாய் எப்போதும்
சிட்டுக்குருவியின் சிறப்பான ஒரு கூட்டை
வசந்த காலத்தின் வடிவான பெருவாழ்வை
உலகமே ஒன்றாகி உலையில் போட்டதம்மா
மானிட மாண்புகளும் மனித உரிமைகளும்
மலிவென இங்கிருந்தும் மரணித்துப் போனதம்மா
நீரில் தத்தளிக்கும் ஓர் நாயை மீட்பதற்கு
கெலிகெப்ரர் உதவியுடன் நயமான நடவடிக்கை
எலிபிடிக்கப் போன பூனை குழாயில் சிக்கியதாய்
பூனையை பிடிப்பதற்கு புதிரான நடவடிக்கை
நேற்றைய தொலைக்காட்சி நேரடிச்செய்தியது
சொந்த மண்ணில்லை,சொந்தங்கள் உறவில்லை
துன்பத்தில் வீழ்ந்தோமடா சிலுவயைச் சுமந்தோமடா
பொட்டு வைத்து பார்த்த எம் இளம் பெண்கள் எல்லாம்
வெட்டை வெளியில் அரை குறையாய் குளிக்கின்றார்
முட்கம்பி வேலிக்குள் முடங்கிய எம் வாழ்வில்
வேலிகள் பயிரை மேய்ந்த கதை இது
காவல் அரண்களில் கயவரின் கூக்குரல்கள்
கூக்குரல் நடுவே எமக்கொரு கொட்டில்
பார்த்து ஒதுங்கிட பள்ளிகள் இல்லை
பயந்து ஒதுங்கிட கோவில்கள் இல்லை
எல்லாம் இங்கே இடிந்த சுடுகாடாய்
புத்தனின் சிலை மட்டும் புதிதாய் முளைக்கிறது
குடிநீர் கிணறெல்லாம் சவக்குழி ஆனதினால்
நீரினைப்பெற்றிட வரிசையில் நிற்கிறோம்
சவக்குழி படலம் இன்னும் தொடர்கிறது
புரியாத மொழி பேசும் அறியாத அன்னியர்கள்
புதிதாக வாணிபம் புரிக்கின்றான் என் மண்ணில்
அம்மனும்,சிவனும், அல்லாவும் யேசுவும்
அகதிகள் ஆனதினால் அலைந்து திரிகின்றார்
இம்மட்டு நாளும் உறங்கிய சித்தாத்தர்
ஆக்கிரமிப்பாளனாய் அமர்கின்றார் எம் மண்ணில்
நாய்க்கும் பூனைக்கும் வாய்த்த வாழ்க்கை கூட
நாகரிக உலகில் நமக்கில்லை பாருங்கோ.....!


3 comments:
//நீரில் தத்தளிக்கும் ஓர் நாயை மீட்பதற்கு
கெலிகெப்ரர் உதவியுடன் நயமான நடவடிக்கை
எலிபிடிக்கப் போன பூனை குழாயில் சிக்கியதாய்
பூனையை பிடிப்பதற்கு புதிரான நடவடிக்கை
நேற்றைய தொலைக்காட்சி நேரடிச்செய்தியது//
மிருகங்களிடம் மனிதன் கொண்டிருக்கும் கருணையைக்கூட சகமனிதனிடம் காட்டமறுக்கும் மனிதர்களே...நீங்கள் எனிமேல் இன்னொருவனை மிருகமே எனத்திட்டி அவமானப்படுத்தமுடியாது..மிருகங்களே இனி தமக்குள் இழிவானவார்களை சீ..மனிதனே எனத்திட்டி அவமானப்படுத்தும்...உம்மைவிட மேலானவை அவை!...
நன்றி ரஜீவன் தொடர்ந்தும் பாருங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
ஆப்கானிஸ்தானின் அவஸ்தைகளால் இந்தியாவின் கடல் மார்க்கமாய் இலங்கையின் வடக்கில் குடிபெயர்ப்பு.
Post a Comment