Thursday, February 11, 2010

மனிதன் கேட்கிறான்




சோலை மலர்களின் தேன் தேடும் வண்டினமே............

நீ ஓயாது உழைத்திடும் இரகசியம் சொல்லாயோ?

உழைத்திடா மனிதன் உன்னிடம் கேட்கிறான்



மெல்லெனப் பாய்ந்து வளைந்தோடும் நதிப்பெண்ணே..........

நீ நில்லாமல் வளைந்தோடும் இரகசியம் சொல்லாயோ?

சோம்பிக்கிடப்பவன் உன்னிடம் கேட்கிறான்



நீல வானில் அலைந்தோடும் முகிலினமே..........

நீ வழிதனில் தரித்திடா வழி சொல்ல மாட்டாயோ?

எப்போதும் உறங்கும் மானுடன் கேட்கிறான்



கரைதேடித் தவழ்ந்தும் கரைசேரா அலைகளே........

நீ சளைக்காமல் தொடரும் இரகசியம் சொல்லாயோ?

ஊக்கம் கெட்ட உள்ளத்தோன் கேட்கிறான்



தென்றலாய் புயலாய் வீசிடும் காற்றே.........

எந்நாளும் தணியாத உற்சாகம் தாராயோ?

இயலாமை பேசும் இளைஞன் கேட்கின்றான்



காலையில் பிறந்து மாலையில் மரிக்கும் வாசமலரே.........

உன் உள்ளத்தைத்திறந்து ஓர்தரம் காட்டாயோ?

சுயநலவாதி சோதிக்கக் கேட்கிறான்



ஓடையில் வாடி ஒற்றைக்கால் நிற்கும் வெண்கொக்கே.......

காத்திருக்கும் ஓர் சுகத்தை ஒருதரம் சொல்லாயோ?

என் அன்புக்காதலி உன்னிடம் கேட்கிறாள்


அழகான கூட்டின் தூக்கணாங்குருவியே.........

உன் அற்புத அலகின் ஆற்றல் சொல்லாயோ?

முயற்சிக்கா மனிதன் உன்னிடம் கேட்கிறான்



எப்போதும் ஒன்றாய் பயணிக்கும் எறும்பினமே.......

எல்லோரும் ஓரணியாய் வாழும் வழி சொல்லாயோ

ஒற்றுமை நீங்கித்தாழ்ந்தவன் கேட்கின்றான்



இயற்கையில் ஆற்றலைப்புகுத்திய இறைவனே........

முகத்தினைப்பார்த்து அகத்தினை அறியும் ஞானம் தாராயோ?

மனிதனால் நொந்த மனிதன் கேட்கிறான்



4 comments:

U.P.Tharsan said...

//இயற்கையில் ஆற்றலைப்புகுத்திய இறைவனே........

முகத்தினைப்பார்த்து அகத்தினை அறியும் ஞானம் தாராயோ?

மனிதனால் நொந்த மனிதன் கேட்கிறான்//


அழகான வரிகள்

Keddavan said...

//எப்போதும் ஒன்றாய் பயணிக்கும் எறும்பினமே.......

எல்லோரும் ஓரணியாய் வாழும் வழி சொல்லாயோ

ஒற்றுமை நீங்கித்தாழ்ந்தவன் கேட்கின்றான்//

சத்தியமான வார்த்தைகள்..ஒற்றுமையின் பலமறியமால் தமக்குத்தாமே குழிதோண்டியர்களினால் வஞ்சிக்கப்பட்டது தமிழனம்...

வான்முகில் said...

தர்ஸன் அவர்களே உங்களது பாரட்டுக்கு நன்றிகள் தொடர்ந்தும் என்னை ஊக்கப்படுத்துங்கள்......................

வான்முகில் said...

ரஜீவன் அவர்களே உங்கள் கருத்துக்கூட நன்றாக இருக்கிறது.கருத்துக்கு நன்றிகள்.

Post a Comment

yasmin lawsuit