Monday, March 29, 2010

அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்களும் ,அடிமைகளாகும் ஈழத்தமிழர்களும்--ஓர் ஆய்வு

இஸ்ரவேல் மக்களின் பலநூறு ஆண்டுகால அடிமை வாழ்வைப் பற்றியும்அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தை பற்றியும் அறிவதற்கு நிச்சயமாக விவிலியத்தினுள் செல்ல வேண்டும்.எகிப்தின் அடிமைத்தனத்தின்கீழ் கொடுமையான அடிமை வாழ்வை அனுபவித்த இம்மக்களின் விடுதலைப்பயணம் மிக நீண்டது.அந்த வரலாற்றுச்சம்பவங்களில் ஒரு சிறிய சம்பவத்தை மட்டும் தமிழர்களின் இன்றைய ஒடுக்கப்பட்டஅடிமை வாழ்வுடன் ஒப்பிட்டு அதில் எழும் கேள்விக்கான சரியான விடையினைப் பெறுவதினூடாக ஈழத்தமிழரின் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்வை விடுதலை வாழ்வாக மாற்றமுடியும் என நம்புகின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் உலக வாழ்வில் போராடும் மக்களை வழிநடத்துவதற்காக ஒருவரை தெரிந்தெடுப்பதை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்கிறோம். அல்லவா? அதே போலத்தான் இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்காக தேர்ந்தெடுத்தவர்களில் "மோசே" என்பவரும் அவரின் பின்வந்த "ஜோசுவா" என்பவரின் வரலாற்றையும் தாயகத்திலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் இன்று அறிந்திருப்பது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் ஜோசுவாவின் சம்பவம் ஒன்றையே நான் ஒப்பிட விளைகிறேன்.இந்தக்காலம் போலல்லாமல் ஆதிகாலத்தில் மனிதர்களுடன் கடவுள் பேசியதையும், நேரடியாக கதைத்து உறவாடியதையும் பல மார்க்கங்களில் நாம் வாசித்து அறிகின்றோம். அந்த வகையில் முகமுகமாக பார்த்து பேசிய பெருமையும் வழிநடத்திய பெருமையும் கிறீஸ்தவத்தில் மோசேக்கே சேரும்.மோசே தனது நூற்றியிருபதாவது வயதில் "மோவாப்" தேசத்தில் மரித்ததைத்தொடர்ந்து அடிமைப்பட்ட இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை கடவுள் யோசுவா என்பவருக்கு வழங்கினார். யோசுவாவின் காலத்தில் நடந்த அழகான சம்பவம் ஒன்று தமிழ்மக்களுக்கு முக்கியமான ஓர் பாடமாக இருக்கும் என எண்ணுகிறேன்.உண்மையில் வரலாறு மனித குலத்துக்கு வழிகாட்டிச் செல்வதையும் அது மீண்டும் மீண்டும் பிறப்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. மோசேயின் காலத்தைப் போன்றே "யேசுவா"வும் தன் மக்களை வழிநடத்திச்செல்கையில் பல போர்களை ச்சந்தித்தார்.தமக்கு எதிராக வந்த அத்தனை பேர்களையும், கடவுளின் வழிநடத்தலுடன் அழித்தொழித்து பிரதேசங்களை படிப்படியாக மீட்டார் .ஈழத்தமிழர்கள் பெற்றிருந்த வெற்றியைப் போன்று.ஆனால் இஸ்ரவேலர் கானானியரையும் ,ஏத்தியரையும்,ஏவியரையும் ,பெரிசியரையும், கிர்காசியரையும், ஏமோரியரையும்,எபூசியரையும் . துரத்தியும் முறிய அடித்தும் பயணித்துப் போராடி வென்றார்கள். இந்த நீண்ட பயணத்தின் போது யேசுவாவும்,இஸ்ரவேல் மக்களும் "எரிகோ" எனும் பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக சீத்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி யோர்தான் கடந்து செல்லவேண்டியிருந்தது.இந்த நதியைக் கடக்கும்போது கூட மோசே செங்கடலைப்பிரித்து மக்களை அழைத்துச்சென்றதைப் போன்று கடவுள் நதியை ஓடாமல் நிறுத்தி வைத்து அதை வற்றவைத்த பின்பு இவர்கள் கடந்ததாகவும் இதன் அடையாளமாக பன்னிரண்டு கற்கள் "கிக்கால்"எனும் இடத்தில் நாட்டப்பட்டுள்ளதையும் இன்றும் காணலாம். தமக்கு எதிரான எரிகோவை கைப்பற்றுவதற்காக ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் யுத்த சன்னத்தராய் போனார்கள்.

இங்குதான் முக்கியமான ஒன்றை நோக்கவேண்டியுள்ளது.அதாவது இந்தப் பட்டணத்தைக் அழிக்கும் போது இதிலுள்ள எப்பொருளையும் ,களவாடவோ சூறையாடவோ கூடாதென கடவுள் யோசுவா ஊடாக கட்டளை கொடுத்திருந்தார்.கடவுளின் கட்டளைப்படி யோசுவா வழிநடத்திய மக்கள் இந்தப் பட்டணத்தைக் கைப்பற்றி முழுமையாக தீக்கிரையாக்கினார்கள்.இங்கே இஸ்ரவேல் வேவுக்காரர் இருவருக்கு உதவி செய்த "ராகாப்" எனும் வேசி ஒருத்தியின் குடும்பம் தவிர எல்லாமே தீக்கிரையாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு தவறு நடந்தது.ஆம் போரில் ஈடுபட்ட வீரர்களில் "ஆகான்"என்பவன் தன் தலைவன் கட்டளையை மீறி கொள்ளைப் பொருட்களில் ஆசைப்பட்டு சிலவற்றை தனது சுயநலத்திற்காக எடுத்திருந்தான். இப்போரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேனுக்கு கிழக்கேயுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற "ஆயி" பட்டணத்தைக் கைப்பற்ற எண்ணி அதை வேவு பார்பதற்காக ஆட்களை அனுப்பினார்.வேவுக்காரர் திரும்பி வந்து நமது ஜனங்கள் எல்லோரும் போக வேண்டியதில்லை.ஏறக்குறைய இரண்டாயிரம் ,மூவாயிரம்பேர் போய் அயியை முறிய அடித்துவிடலாம்.அவர்கள் கொஞ்சப் பேர்தான் என்றனர்.அப்படியே ஏறக்குறைய மூவாயிரம் பேர் அங்கே போருக்கு போனார்கள்.ஆனாலும் அவர்கள் "ஆயியின்"மனுசருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.செரீம் மட்டும் துரத்தி வந்த அவர்கள் மலையிறக்கத்திலே இஸ்ராயேலரை வெட்டினார்கள்.இதனால் இஸ்ராயேல் ஜனங்களின் மனங்கள் கரைந்து தண்ணீராய்ப் போயிற்று.கடவுளை நம்பியிருந்த"யோசுவா"மனம் உடைந்தவராக தன் வஸ்திரங்களை கிளித்துக்கொண்டு கடவுளின் உடன்படிக்கைபெட்டிக்கு முன்பாக முகம் குப்புற வீழ்ந்து கிடந்து புழுதியைத்தலையில் கொட்டி அழுதார்.அப்போது கடவுள் யோசுவாவை நோக்கி எழுந்திரு நீ இப்படி முகம் குப்புற வீழ்ந்து கிடப்பது என்ன? இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள் நான் கட்டளை இட்டதை மீறி பொருட்களுக்கு ஆசைப் பட்டு கொள்ளையிட்டார்கள் அதனால் தங்கள் எதிரிக்கு முன்பு நிற்கக்கூடாமல் புறமுதுகு காடினார்கள் என்றார். எனவே சாபத்தீட்டானவர்களை உங்கள் நடுவிலிருந்து எரிக்காவிட்டால் இனி நான் உங்களோடு இரேன் என்றார் கடவுள்.(யோசுவா. 7:11 :12)

அத்துடன் இச்செயலைச் செய்தவர்களும், அவனுக்குள்ள யாவும், அக்கினியில் சுட்டெரிக்கக் கடவது என்றார். இதன்படியே யோசுவா மறுநாள் எல்லா வம்சங்களையும், தனக்கு முன்பாக வரப்பண்ணி, விசாரணை குறிக்கப்பட்டு, "ஆகான்" செய்த மதிகேடான காரியமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்பதனைக் கண்டறிந்தான்.அவன் பூமிக்குள் புதைத்து வைத்திருந்த,அந்தக் களவாடிய பொருட்களையும், ஆகானையும்,அவன் குமாரரையும், குமாரத்திகளையும்,அவனது கால் நடைகள் உள்ளிட்ட அவனுக்குண்டான யாவற்றையும், யோசுவாயும் இஸ்ராயேலரும் கூட ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய், அவன்மேல் கல்லெறிந்து,அவைகளை அக்கினியில் சுட்டெரித்து,கற்குவியலைக் குவித்தனர்.ஆகையால் அந்த இடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.(யோசு. 7:24-26). தம்மத்தியில் தமக்கு எதிராக துரோகத்தனம் புரிந்த, தம் தலைவனின் கட்டளைக்கு எதிராகச் செயற்பட்ட அல்லது தனது சுயநலத்துக்காக செயற்பட்ட "ஆகானை" இஸ்ராயேல் மக்கள் அன்று இனம் கண்டு தம்மத்தியிலிருந்து வேருடன் பிடுங்கி சுட்டெரித்ததன் பின்னர் தாம் தோற்றுப்போய் பின்வாங்கி ஓடிய ஆயின் பட்டணத்தின்மேல் மீண்டும் படையெடுத்து, முளுமையான ஓர் வெற்றியைப் பெற்றனர். இப்படியாக தமக்கு கடவுள் வாக்களித்த தேசத்தை மீட்டனர் என்பதே வரலார்று.
அக்காலத்தில் தெய்வங்கள் நேரில் நின்று தாமே போராடி தீயவர்களை அழித்துள்ளதை பல மார்க்கங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக முருகப் பெருமான் சூரனுடன் போர் செய்து அவனை வீழ்த்தியதையும் நாமறிவோம்.இன்று அப்படியில்லையே என சிலர் சிந்திக்கலாம், ஆனால் அதுவல்ல முக்கியம்.அதற்காக வாதாடுவதும் எனது நோக்கமல்ல,நேரயாடிக போர் செய்யாவிடினும், அதற்குச் சமமான மாபெரும் ஆற்றலை,பகுத்தறிவை விழிப்புணர்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமாக வழிகாட்டி நிற்கும் வரலாற்றையும் கடவுள் மனித குலத்துக்குக் கொடுத்துள்ளார். இது ஒன்றே வெல்வதற்குப் போதுமனதாகும்.



பல தசாப்தங்களாக அடிமைப் பட்டிருந்த தமிழினத்தின்,அடிமை விலங்கினை உடைப்பதற்காக தமிழ் இனத்தின் மத்தியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குமுன் தலைவனாகத் தோன்றிய ஒருவர் தன் மக்களை வழிநடத்தி இஸ்ராயேல் மக்கள் பெற்ற அதே போன்ற தொடர் வெற்றிகளை ஈட்டி, வளம் நிறைந்த, பாலும் தேனும் வழிந்தோடும் தாயகப் பிரதேசத்தை மீட்டு தமிழினம் அன்னியத் தலையீடின்றி சுதந்திரமாக வாழ்ந்து வந்தது.அங்கு சாதீயமோ, மதப்பிளவுபாடோ, அச்சமோ இருந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ராயேலருக்கு "ஆகான்"என்பவனைப் போல் தமிழ் இனத்துக்கும் பற்பல துரோகிகள் தம் இனத்துக்குள்ளிருந்தே உருவானார்கள், இதனால் இஸ்ராயேலருக்கு "ஆயிலில்"நடந்ததைப்போன்று இங்கும் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் அந்த மக்களோ, தம் துரோகிகளையும் சுயநலக் காரர்களையும்,கல்லால் எறிந்து சுட்டெரித்தார்கள்.அடியோடு ஓழித்தார்க்ள் இதனால் தமக்கான நாட்டை அவர்கள் மீட்ட வரலாற்றுப் பாடத்தில் நின்று கொண்டு,தமிழர்கள் நன்றாகச் சிந்தித்தால்,அவர்களின் தோல்விக்குக் காரணம் பல இருப்பினும், முக்கியமானது, எதிரிக்குத் துணை போனதும்,ஓரணியில் ஒன்று படாமையும்,சுயனலத்துக்காக சிலர் செயற் பட்டதையும் குறிப்பிடலாம். எனவே இந்த மூன்று விடயத்தையும் ஒழித்து விட்டால் தமிழ் இனம் தம் தாயகத்தை நிச்சயம் அமைக்கலாம்.மேற்குறிப்பிட்டவர்களை வேருடன் பிடுங்கி தீயில் போடுவதற்கும் கல் எறிவதற்குமான மிக அருமையான, அற்புதமான ஓர் சந்தர்ப்பத்தை இப்பொழுது வரலாறு தமிழர்களுக்கு வழங்கிப் பார்த்து நிற்கிறது.அதுதான் நடக்கப்ப்போகும் "தேர்தல்." நான் மேலே குறிப்பிட்டதைப் போல் உங்களிடமுள்ள அற்புதமான பகுத்தறிவைப்பாவித்து,விடுதலைக்காக வித்தானவர்களையும் அதன்பால் உயிர் நீத்தவர்களையும் நினைந்து தூரனோக்குடன் சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாசல் தேடி வந்து நிற்கும் மேற்சொன்ன மூன்று வகையனவர்களையும் ஒழித்துவடுங்கள். நான் அரசியல் சாக்கடையில் விழாதவன்,ஆனால் அரசியலையும் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.போரில் வென்றலும்கூட இன்றைய உலக ஒழுங்கில் தேர்தல் மூலமான மக்களின் வாக்களிப்பே இறுதி முடிவாகவுள்ளதை நீங்களும் அறிவீர்கள்.முகத்துக்கோ, உறவுக்கோ, முன்னுரிமை கொடுப்பதைத் த்விர்த்து, எதிர்காலத்தை மட்டும் கருதி செயற்படுங்கள்,ஒற்றுமையை நிலை நாட்டுங்கள் கடவுளின் வரலாற்றினூடாகப் பேசினேன் இது தவறினால் தாயகம் முழுவதும் சிங்களவர் மயமாகும்.இப்போதே அடிமரத்தில் கோடாரி வைக்கப்பட்டுள்ளது, காலம் காத்திருப்பதில்லை , அது கடந்துவிட்டால் கடுகளவும் பயனில்லை.




......

Saturday, March 13, 2010

உயிர் காத்த உயிர் மரங்கள்




மனிதனை மனிதன் மரமெனத்திட்டுவான்

உணர்ந்தும் புரிந்தும் மறுபடி திட்டுவான்

மாஜம் மனிதனே மரித்திடும் உடலமே

மரமது மேலடா உன் மனதிலும் உயர்வடா

உன் கண்களை மூடி மூச்சினை இழுத்து

மனதினை திறந்து ஒரு முறை பார்

ஒருவனை ஒருவன் ஒழித்திட நினைப்பான்

வன்முறை தூக்கி வாழ்வினை அழிப்பான்

முந்தினோன் வாழ்வான் பிந்தினோன் வீழ்வான்

சமனிலை குழப்பி சாவினைக் கொடுப்பான்


உன் ஒவ்வொரு மூச்சும் மரத்தின் பிச்சை

மரங்களின் நன்மை புரிந்துவிடு

இயற்கையின் அன்பு தெரிந்துவிடும்-உன்

முந்தையர் முகத்தினை கண்டறிவாயோ

அறியேன் என்பாய் ஆவலில் துடிப்பாய்

முற்றத்தின் நடுவில் வேம்பினைப் பார்

வயலோர வெளிகளில் பனைகளைப் பார்

அம்மன் கோவிலின் ஆலினைப்பார்

ஆண்டவர் கோவிலின் மரங்களைப் பார்

ஆச்சியின் கோடிப் புளியினைப் பார்-நம்

முந்தையர் நட்டவை நிமிர்ந்து நிற்பவை

அத்தனை மரமும் முந்தையர் முகமே


உவர் நீரை ஊற்றினும்-அதை

இளநீராய் தரும் மனம்-நாம்

புசிக்கக் கனியாய் கடிக்கக் காயாய்

குடிக்கப் பாகாய் படுக்கப் பாயாய்

வசிக்க வீடாய் வாழ நிழலாய்

நோய் தீர்க்க அரு மருந்தாய் -எத்தனை

நூற்றாண்டாய் நிழலாயகி நின்றிடுவாய்

அழகு தேவதையே மயக்கும் பூமணமே

ஆயிரம் ஏசிகள் அவனியில் வந்தாலும்

ஆலுக்கும் வேம்க்கும் அது ஈடாகுமோ


வெட்ட வெளியிலே குண்டு மழையிலே

நித்தம் நனைந்தவர் நிர்மூலமானவர்

கத்தி மடிந்தவர் கத்தாமல் மாண்வர்

அக்கம் பக்க அல்லோலம் பார்த்து

தன்னுயிர் காத்திட மனிதரோ ஓடினார்

காலை நின்றவர் மாலை மாறினார்

மாலை நின்றவர் காலை வாரினார்

அன்பு மரங்களே அசையாமல் நின்றீர்

நெஞ்சில் ரவையேந்தி உடலில் கணையேந்தி

போராளிமனமாகி தியாகங்கள் புரிந்திட்டாய்

உயிர் காத்த உயிர் மரமே -பச்சையாய்

உனைத் தறிக்க மனமில்லை கண்கணியே

முட்டியுடன் வீழ்த்தினோமே பெண்மணியை

பாளைக்கு பொன்போட்டுப் பொங்கலிட்டு -அது

இளநீராய் ஆகுமுன்பே கண்ணீரைப் பரிசளித்தோம்

அழுதழுது உனைத் தறித்து-நாம்

அதனால்த்தான் உயிர் பிழைத்தோம்

யேசுவுக்கு நீ சிலுவை

எங்களுக்கு நீ யேசு

கட்டியணத்து முத்தமிட நீயில்லை

இயற்கையும் இறைவன் தான்

கடவுளின் சாயல் தான்

கோழியின் இறக்கைகள்-என்றும்

குஞ்சுக்கு காப்பாகும்

மரங்களின் உடல்களே

எங்களின் உயிர் காப்பு

பனை மரமே பனைமரமே நீயெங்கே

உயிர் காத்த உயிர் மரமே நீயெங்கே

எமை மூடி நீகிடந்தாய் -நன்றியம்மா

கணையேந்தி உடல் பிளந்தாய் நன்றியம்மா

எமைக்காத்து நீ மரித்தாய் நன்றியம்மா

இது கவியல்ல கவியல்ல

கண்ணீரின் ஓர் கோரல்

ஊரெங்கும் மரம் நடுவோம்

உணர்வோடு வளர்த்தெடுப்போம்

Friday, February 19, 2010

ஒன்று பட்டால்

வந்தோரை வரவேற்கும் பண்பாளன் தமிழன்
படமெடுத்தால் பாம்படியான் அது பாவம்

பாவமென்றால் கொத்தவிடு அது செய்யான்

அடிப்பவன் அடித்திடட்டும் அதுவரை தூர நிற்பான்

வீர மரபினரை விரதமென்றும் யாகமென்றும்

பூஜைக்குள் தோய்த்தெடுத்து மூழ்கவைத்தான் ஆரியன்

வருடமெல்லாம் வழிபாடு சிந்திக்க நேரமில்லை

பாரினிலே உள்ளதெல்லாம் பார்க்காமல் ஏற்றிடுவான்

நல்ல மனம் உள்ளதினால் உன்னைப்பலர் ஏய்த்திடுவார்

நம்பி நம்பி கெட்டது தான் நம்முடைய வரலாறு



என்னினமே தமிழினமே நீ ஒரு கண்ணாடி

இன்றல்ல நேற்றல்ல நீ எப்போதும் கண்ணாடி

முன் நிற்போன் உன்னில் தன் முகம் பார்ப்பான்

உன்னை நீ பார்ப்பதில்லை அறிவாயோ ? எப்போதும்

உந்தனது வரலாற்றில் நீ ஓரணியில் நின்றதுண்டா?

எண்ணிப்பார் எட்டப்பன் ,காக்கையன் ,கருணாகம்

இப்படித்தான் வரலாறு ஓடோடிப் போகிறது



வெற்றியும் தோல்வியும் வீரர்க்கு உண்டெல்லோ

உலகமே ஒன்றாகி ஒரு பக்கம் நின்றிட்டால்

கொக்கும் கறுப்பாகும் காகம் வெளுப்பாகும்

இதிலென்ன புதிருண்டு இதுதானே வரலாறு

நம் பெருமை நாம் பேசி நமக்கேதும் வந்ததுண்டோ?

காலமென்னும் போகவில்லை களநிலமை மாறவில்லை

நீ இன்று முடிவை எடு ஓரணியில் ஒன்றுபடு

தேசியத்தைக் கையிலெடு சுயநலத்தைக் கொன்றுவிடு

தெளிவான வழிவந்த வரலாறு உன் அருகுண்டு

அழகான தேசத்தின் தெளிவான படமுண்டு

அதை வைத்து போராடு பணியாது வாதாடு



ஒன்றல்ல பத்தல்ல ஆயிரமாய் வீழ்ந்த இனம்

படுகுழிகள் காயவில்லை பத்து மாதம் ஆகவில்லை

எவருக்கும் பணியாதே எம் மனமெல்லாம் வித்துண்டு

மரமாகப் போகிறது எரிமலையாகப் போகிறது

நல்ல மரம் தான் வேண்டும் நரிகளுக்கு இடமில்லை

இது தமிழ் நாட்டு தேர்தலல்ல பிரபாவின் வீர இனம்

நடந்திட்ட தேர்தலின் நயமான பாடமிது

மீண்டும் வருகிறது ஒன்றுபட்டால் வென்றிடலாம்



உலகத்தின் மாந்தர்க்கு இப்ப நல்ல தெளிவுண்டு

எல்லோரும் நம் பக்கம் நாள் போனால் மறந்திடுவார்

நம்மில் தான் தெளிவில்லை நாலாகப் பிரிகின்றார்

கேட்காமல் கிடைப்பதில்லை தட்டாமல் திறப்பதில்லை

ஒன்றாகி நில்லுங்கள் உரிமைக்காய் குரல் கொடுங்கள்

உணர்வாகி மக்களெல்லாம் உம்மோடு நின்றிடுவார்

Thursday, February 18, 2010

நரகத்தின் கதை (உண்மைக்கதை)


எங்கும் அமைதியுடன் கூடிய மயானக்காட்ச்சி,ஆனால் ஏதிலிகள்ஆக்கப்பட்ட மக்கள், நடைப்பிணங்களாக நடமடுகின்றனர். நடக்கப்போவதை அறியாத சிறுவர்களின் ஆரவாரம்,பளுதடைந்த உணவைப் பெறுவதற்க்காக முந்தியடித்து ஓடிச்செல்லும் பலர்.அழகுகள் அசிங்கங்களாக, சதா உளைத்த கரங்களெல்லாம் நீண்ட ஓய்வுக்குள்.பாண் போறணையை ஒத்த இந்த தரப்பால் கொட்டிலால் நோட்டமிடுகிறான் சுரேஸ். தூரத்தே முட்க்கம்பிச்சுருள்கள் அருகருகே படையினர், அவசரமாக நீழக்காற்சட்டையைஅணிந்த சுரேஸ், தன்னிடமிருந்த கசங்கிய சாயம் பிரண்ட ஒரேயொரு சேட்டை திருப்பித்திருப்பிப் பார்த்தான். அந்தக் கழிவு வாய்க்காலில் மணிக்கணக்காக கழுத்தளவு தண்ணீருக்குள் நிற்க்கவைத்தே,அப்புறமாக இந்த முகாமுக்கு இராணுவம் சுரேசைக் கொண்டுவந்திருந்தனர்.அவனின் மேலங்கி கழுவியும், அழுக்குப் போகவில்லை. மனிதர்களே இறங்கியிராத மிருகங்கள் செத்து மிதந்த அந்த சேறு சுரி நிறைந்த கழிவு வாய்க்காலால் வந்த அநேகர்,செருப்பைக்கூட தொலைத்தே வந்தனர், இந்தக் கேவலத்துடன் திருமலையிலிருந்து தன்னைச் சந்திக்கவரும் வயோதிபரான தன் அன்னையை எதிர் கொள்வதில் சுரேஸ் மிகவும் சஞ்சலப்பட்டான். ஆம் அரச உத்தியோகத்தரான தன் மகனில் அவ்வளவு அன்பையும் மதிப்பையும்,கவனத்தையும் வைத்திருப்பவள் அவள். சாப்பாட்டின்றிக் கிடந்த உடல், சொறிசிரங்கு ஒருபக்கம் ,எல்லாவற்றையும் விட அம்மாவுக்கும் தனக்கும் இடையிலான அந்த முட்கம்பிவேலியை நினைக்கும்போது அவன் மனம் பேதலித்தது. இப்போது தள்ளாடியபடி நடக்கத் தொடங்கினான் .வெட்டவெளியில்,கொடியவெயிலில் பாதங்கள் வெந்து தொப்பளித்தது. மூன்று கிலோ மீற்றர் தூரம் நடந்த பின்பே அந்த முட்கம்பி வேலி வரும். .வழிகளில் ஒதுங்கிட நிழல்கள் மிகக் குறைவு,கொப்பளித்த கால்களுடன்,கெந்தியும் ஓடியும் சென்றான். தாளாத களைப்பு, நீண்ட வரிசையில் குடிநீருக்காக காத்து, இல்லை காய்ந்து நிற்க்கும் மக்களைப் பார்த்தவன் தனக்குள் சிந்திக்கலானான், காலடியில் சொந்தக் கிணறு, வழிந்தோடும் வாய்க்கால்கள்,எத்தனை குளங்கள்,நீண்ட பெரு மூச்சொன்றை விட்டவன் சேற்றுக்கு நடுவில் கிடந்து நாய்படாப் பாடுபடும் அந்தக் குளாய்க்கிணற்றடியில், சற்று நிற்கிறான். நிலத்திலிருந்த சிலர் தாழமல் எழுந்து நின்று அவனுக்கு ஏதோ மரியதை கொடுக்கின்றனர்.சிறிய பெண்பிள்ளை ஒன்று தனது றபர் யொக்கில் நீரைத்தந்து,மெதுவாக சேர் என்கிறாள்,சுயநினைவுக்கு வந்தவனாக நிமிர்ந்து பார்த்தவன், அது தன் மாணவி. இப்போது நீரைப் பருகியவன்,நன்றி கூறினான், அவளன்னையும் அவளும் அளுதவண்ணமிருந்தனர்.ஆம் அவளின் தந்தை வரும்வழியில் மாண்ட்கதை கேட்டவன், கண்ணீர் சிந்தியவனாக தொடர்ந்து நடந்தான். .அவன் சிந்தனையைப் போலவே கால்களும் த்ள்ளாடிச்செல்கின்றன.அடுத்ததாக வீதியின் வலது பக்கம் உலகத்தை பேய்க்காட்டும் மருத்துவமனை வருகிறது, இங்கு நோயளர் வரிசையில் நிற்கிறார், இருக்க்கிறார்,கிடக்கிறார். வரிசைகளுக்குப் போட்டிவைத்தால் முதலிடம் இதுதான் வரும், ஓ கடவுளே வெறும் தரையில் வருத்தக் காரர்களெல்லாம் இயலாமல் படுத்துக் கிடக்கின்றனர்.குழந்தைகள் கற்ப்பவதிகள் வயோதிபர்கள்,இலையான்கள் கும்பலாக மொய்க்கின்றது, வழியில் இவற்றையெல்லாம் பார்த்தவனுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது, இப்பகூடதனது தோற்றம் ஒரு மனனிலை பாதிக்கப்பட்டவனைப் போன்றுள்ள்தைக் கண்டு தனக்குள் சிரித்தவனாகச் செல்கிறான்,வாழ்வே முடிந்து போன மனநிலை, உத்தியோகம் வீடு என்றிராமல் ஒவ்வொரு மணித்துளியையும் கடின உழைப்புக்குள் ஈடுபடுத்தியவன் சுரேஸ். பள்ளிகூடம், பாட ஆயத்தம் தவிர்ந்த நேரங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு, சம்பாதித்த முழுவதையும் நிலத்திலும் விவசாய உபகரணங்களிலும் முதலிட்டிருந்தான்.கழைத்து உழைத்ததெல்லாம் முள்ளிவாய்க்கால் கடற்கரையில்.யாருக்குத் தெரியும் இந்தளவு சீரளிவு வருமென்று, ஒரேயொரு ரோச்லைட் மட்டும் கையில் கொண்டுவந்தும் அதைக் கூட பறித்தெடுத்த புண்ணியவான்கள் விட்டுவந்ததையா தரப்போறான்கள்,ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பியவன் நாற்றம் தாழாமல் மூக்கைப் பொத்தினான், மதியவெயிலிலும் மலசலம் கழிப்பதற்கு வரிசையில் காத்திருக்கும் உறவுகளைப் பார்த்து ,கடவுளே ஏன் இந்தக்கொடுமை என்றவன்,உண்மையில் சமரசம் உலாவும் இடம் இதுவோ என்றெண்ணினான்.காரணம் எல்லோரும் வரிசையில்,அநேகமாக ஓரிரு நாட்களில் குழிகள் நிரம்பிவழிவதால், அப்பகுதியே நாற்றமெடுக்கும். அத்துடன் கழிவறையின் உட்சென்றால் பலஅறைகளில் வெள்ளை நிற மாபிள் கோப்பை முளுவதும், மலம் நிரம்பி சிலவேளைகளில் பாதம் வைக்கும் இடத்திலும் அது பரவியிருக்கும்.உண்மையில் இறப்பதற்கு முன்னமே இம் மக்கள்னர் நரகத்தைப் பார்த்துவிட்டனர் .பத்துக் கழிவறையில் ஐந்துக்கு கதவிருக்காது, அடக்கமுடியாத மலத்தைக் கழிப்பதற்கு அந்தக் கதவில்லாக் கழிவு(நரக)அறைக்குள் நுளைந்ததும் வரிசையில் அடுத்ததாக நிற்க்கும் நபர் அல்லது உறவினர், வாயில் பகுதியை தகரத்தால் சாத்திப் பிடித்திருப்பார். அந்தத் தகரம் முடிவிலியாகக் கைமாறிச் செல்லும், அதுவொரு தொடர் கதை. வழியில் உணவு வழங்கும் வாகனமொன்றுநிற்கிறது ,பெரும் கூச்சல் குளப்பம் மெதுவாகப் பார்க்கிறான், அநேகமான பெண்களின் நாரிகளில் சிறு பிள்ளைகள், ஆனாலும் வரிசைதான் அவன் முன்னுரிமைகொடுத்தாலும் நம்மடையள் விடாதுகள்,வயோதிபர் ஒருவர் வரிசையைக் குளப்பி முன்னுக்குச் சென்று விட்டதால் தான் இவ்வளவு கூச்சலும் ,பாவம் அந்த மனுசன் மெலிவதற்கு இனியிடமில்லை.பசிதாங்காமல் முன்னுக்குப் போயிற்றார் போலும் ஆனால் சனம் குழம்பிட்டுதுகள்,மனச்சாட்சியுள்ளயாரோ ஒருவர் அவருக்காக வாதாட முற்பட்டாலும் வெல்லமுடியவிலைப் போலும் வயோதிபர்கடைசி வரிசைக்கு போகின்றார் நமது ஒற்றுமையை எண்ணிய இவ்வளவு பட்டும் நாங்கள் திருந்திடவில்லை என தனக்குள் முணுமுணுத் சென்றான்.ஆனால்மறுநிமிடமே சிந்தித்தான்,பாரியபிரதேசமான வன்னியில்,பல்வேறுஇடங்களில் பலதரப்பட்ட சூழலில்வாழ்ந்த முழுப்பேரும் ஒரேபகுதியில் அடைபட்டிருந்ததால் பல்வேறு பிரச்சனைகட்கும் மன உழைச்சல்களுக்குமெல்லோருமே அந்தௌட்பட்டிருந்தனர். இதனால் சுகாதாரப்பிரச்சனைகள் மிக மிகமோசமாக இருக்கிறது,இதைப் போன்றே மற்றவைகளும். இந்தக் காட்ச்சிகளினூடே அவன் கால்களும் நடந்ததால்,உறவினர் சந்திப்பிடத்தை வந்தடைந்தான்,இன்று என்றுமில்லாதவாறு முட்கம்பியைத் தள்ளியவாறு முகாம்மக்கள், நீண்டகாலமாக இங்கு தங்கியிருப்பவரான ஒருவரிடம் காரணத்தை மெதுவாக வினாவினான். இன்று வெசாக்பண்டிகை என்பதனால் சிலவேளை பார்க்கவருபவர்களை சாப்பாட்டுச் சாமான் கொண்டுவர விடல்லாம் என்ற நம்பிக்கையில தான் ஆட்கள் நிறைய வருகினம் என்றார், நம்பிக்கையுடன். இதுவெறும் நப்பாசையென்றான் சுரேஸ் , இல்லை சிலவேளை இப்ப அவர்கள் மனம்மாறியிருக்கலாம் தானே என்று பெரியவர்கூறியதும், இருவரும் மெதுவாகச் சிரித்தனர்.சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்றவன் கடவுளே என்று அப்படி நடந்தால் கனநாளைக்குப் பிறகு பளுதடையாத சாப்பாடு அதுவும் அம்மா கையால் சமையல் அவனுக்கு வாய் ஊறியது, மாதக்கணக்கில் செருப்பிலாமல் தொப்பளித்த கால்களுக்கும் பாதணி கிடைத்து விடுமென எண்ணியவனாக வரும் வழி நோக்கினான். ஆம் இப்போது தூரத்தே உறவினர்கள் ஓடியும் விரைவாக நடந்தும் வருகின்றனர் சுவாமிக்குத் தீப ஆராதனை செய்யும் போது சைவபக்தர்கள் எங்கனம் பக்திப் பரவசத்தால் சுவாமியைப் பார்க்க முண்டியடிப்பார்களோ அதைப் போன்று அக் காட்ச்சியமைந்தது. சுரேஸ் நுணிக்காலில் தானும் எட்டிப் பார்த்தான்,இந்தச்சுற்றில் அம்மா வரவில்லை,மணிக்கணக்கில் காத்துக்கிடந்து வந்தவர்களும்,முட்கம்பிச்சிறைக்குள் உள்ளவர்களும்,அழும் காட்ச்சிவானைப் பிளந்தது. ஆம் அநேகமாக எல்லா வீடுகளிலும் இறப்பு நடந்ததால் இழவு வீடு கொண்டாடுமிடமாகஇந்த முட்கம்பி வேலியே மாறிவிட்டிருந்தது.சிலர் கட்டியணைத்து அழ முயற்ச்சித்து முகத்தில் முட்க்கம்பி கிளித்த்து,இரத்தம் வடிகிறது. சகிக்கமுடியாத அவலமிது, வழங்கப்பட்ட வெறும் அரை மணி நேரம் முடிவடைந்ததால் சிலர் அழுதழுது போகின்றனர்.அந்தத்தருணத்தில் ஒரு பெண் தன் இடையில் மறைத்து உடுத்திவந்த கறுப்புநிற உட்பாவாடை ஒன்றை,இமை மூடும் கணப்பொழுதில் களட்டியவள், முட்கம்பிக்குள் நின்றபெண்ணிடம்,வழங்கிவிட்டு பயந்தவண்ணம்வெளியேறினாள், சடுதியாகத் தன் கண்ணில் பட்ட இச்சம்பவம், அவனின் மனதை உலுப்பியது. தன் உறவுக்குத் தேவைப்படும் உள்ளாடை ஒன்றைக்கூட கொடுக்க முடியாதளவுக்கு நிலமையுண்டென்றால் இதை என்னவென்று சொல்வது. சிறைச்சாலையை விட மிக மோசமான நிலமைதான். திடீரெனஅவன் மனம் சஞ்சலப்பட்டது, ஆம் பொருட்கள் எவையும் இன்று அனுமதிக்கப் படாததை வாடிய முகங்களும் வெறும்கைகளும் உணர்த்தியது. வெசாக் கதை சொன்ன பெரியவரின் முகத்தைப் நோக்கினான், வாடிய வதனமாய் திரும்பிச் செல்கிறார்,எந்தப்பொருட்களும் வரப்போவதில்லை என்பது தெளிவாகியது. ஆனால் தன் அன்னையைக் காணும் ஆவலில் சுரேஸ் காத்திருந்தான். அடுத்த பார்வையாளர்கள் விரைந்து வருகின்றனர். ஆவல் மேலிட அம்மாவை அண்ணார்ந்து தேடுகின்றான், ஏமாற்றம் தான் இந்த முறையிலும் வரவில்லை,ஆனால் தங்கள் தூரத்து உறவினர் ஒருவர் வருவதைக் கண்டவன் சைகை செய்து அவரைச் சந்தித்தான் தன் தாய் மறுமுனையில் தன்னைப் பார்ப்பாதற்கு மிக ஆவலுடன் நிற்ப்பதாகச் சொன்னதும், அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.வந்தவரோ தம் உறவுகளைத் தேடினார், அவர்கள் இங்கு வந்திருக்கவில்லை, காரணம் இந்தப்பெரிய முகாமில் ஓரிரு பகுதிகளில் மட்டும் கட்டப்பட்ட ஒலிபெருக்கிமூலம் அறிவிப்பது எல்லோருக்கும் கேட்பதிலை, இதுவே உண்மை. கூட்டுக்குள் அகப்பட்ட எலியைப் போல, பாவம் அங்கும் இங்கும் அலைந்தவர், இறுதியில் சுரேசிடம் வந்தவர் எஞ்சிய பத்துநிமிடத்தில் ஒன்றுமே செய்ய முடியாதென்பதை உணர்தவராக,தான் கொண்டுவந்த பொருட்களை எவ்வளவு கெஞ்சியும் படையினர் அனுமதிக்கவில்லை என்றும், கணவன் இறந்த தன் சகோதரி பிள்ளைகளைக் கூட பார்க்க முடியமல் போய்விட்டதே என மனமுடைந்தவராகப் புறப்பட்டார். அம்மாவிடம் என்ன சொல்ல என்றவரிடம் இப்ப வந்தவர்கள் போனதும் அம்மா அடுத்ததாக வந்திடுவார் நான் சந்தித்திடுவேன் தானே நீங்கள் சொன்னவைகளை உங்கள் சகோதரிக்குச் சொல்கிறேன், என வழியனுப்பினான். இப்போது முட்கம்பியுடன் ஒட்டிநின்றளும் ஒரு குடும்பத்தைப் பர்ர்த்தவன் தன் கவனத்தை அதில் செலுத்தலானான்,எறிகணை வீழ்ந்து மாண்டுபோன தன் மகனின்,பிள்ளைகளையும் மருமகளையும் பார்க்க வந்திருக்கும் அந்த வயோதிப அம்மம்மா தான் கொண்டுவந்த சிறிய குடைக்குள்ளிருந்து படையினருக்குத் தெரியாமல் ஒழித்துக் கொண்டுவந்த மூன்றுவடையினை மெதுவாக வெளியில் எடுக்கின்றார்.இழவுவீடு நடந்ததற்கு அறிகுறியாக அனைவரின் கன்னங்களும் கண்ணீர் வடிந்த காட்ச்சி,கீழே நிற்கின்ற பிள்ளையிடம் ஒன்றும் தன் கடைசித் தம்பியை நாரியில் தூக்கி வைத்திருக்கும் மூத்த குமர்ப்பிள்ளையிடம் ஒன்றும், மீதியான ஒன்றை கடைசிப்பிள்ளையிடம் கொடுத்தார். முட்கம்பியால் கையை நீட்டிப்பெற்ற பிள்ளை தன் கையை உள் இழுத்த வேளை எதிர்பாராதவிதமாக கை முட்கம்பியில் பட்டதால் அந்த வடைநிலத்தில் விழுந்து விட்டது. பிள்ளையோ அழத்தொடங்கியது, இரண்டாவது பிள்ளையோ தன் வடையை உடனும் சாப்பிட்டு விட்டது,மூத்த பிள்ளையின் கையில் பாதி மட்டும் மீதியாக இருந்ததால் வேறு வழியின்றி கீழே விழுந்ததை எடுக்க அம்மம்மா குனிந்தபோது, அது ஊத்தை எடுக்கவேண்டாமென்று பல குரல்கள் தடுத்ததால், மூத்தபிள்ளை எஞ்சிய பாதி வடையை பிள்ளையிடம் கொடுத்தது. பிள்ளையின் அழுகை அடங்கியது.ஆனால் அந்த அம்மம்மா கத்தத் தொடங்கினார்.அறுவானுகள்... துலைவானுகள்... இதுவாடா உங்கட வெசாக்கு?... நான் கொண்டுவந்ததெல்லாம் புடுங்கிப் போட்டு விட்ட அறுவான்கள்... ந்ல்லாயிருக்க மாட்டான்கள்.., அப்பாவியான என்ர பிள்ளையை செல்லடிச்சுக் கொண்டதும் பத்தாமல்,அவன்ர குஞ்சுகளையும் கொல்லுறத்துகாடா முள்ளுக்கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கிறாய்? இதுவரை தங்கள் தங்கள் குடும்பங்களுக்காக அழுதவர்கள் இப்போது இந்தக் குடும்பத்திற்காகவும் சேர்த்து, ஏன் தமது விதியை எண்ணி அழுதனர். மொழிதெரியாத சிப்பாய் ஒருவன் கையில் தடியுடன் ஆனால் மணிக்கூட்டைக் காட்டி பார்க்க வந்தவர்களை உடன் திரும்புமாறு சத்தம் போட்டு இப்பகுதி நோக்கி விரைவாக வருவதைக் கண்டவர்கள்,திரும்பிச் செல்கின்றனர். எவரையும் பொருட்படுத்தாத அந்த வயோதிப மாதுவின் குரல் மட்டும் போகும் வழியெங்கும் ஒலித்துச் செல்கிறது. ஆம் முட்கம்பிக்குள்ளிருக்கும் எம்மக்கள் ஊமைகளாய் மாறி தம் மனசுக்குள் நாளும் திட்டுவதை இன்று வெளியில் கேட்க்கும் போது ஒருவித சந்தோசம்தான், அந்த சந்தோசம் கூட நீடிக்கவில்லை, காரணம் அந்த ஒலிபெருக்கி அறிவிப்பு "தவிர்க்க முடியாத காரணமாக உறவினர் சந்திப்பு இத்துடன் நிறுத்தப்படுகிறது."சுரேசின் மனம் சுகுக்குநூறானது, திருமலையிலிருந்து பிரயாணம் செய்த தன் வயோதிப அம்மாவின் மனநிலையை, அலக்களிப்யை, நினைந்து, ஏமாந்து திரும்பும் பலருடன் சுரேசின் கால்களும் தள்ளாடி நடந்தது, செட்டிக்குளக் காட்டின் கொடிய வெயிலில் கால்கள் தொப்பளங்களாவதை அவனறியாது பாதைதெரியாப் பாலகன் போல் ஏதோ பிணமாய் போகின்றான்.

Wednesday, February 17, 2010

நெறி கெட்ட வெற்றி


வற்றாத நீர் இருக்கும்

வயலோரம் நெல் இருக்கும்

கடலோரம் கயலிருக்கும்

முற்றத்தில் கனியிருக்கும்

முப்பதாண்டுப் போரினிலே

இருபதாண்டுத்தடை போட்டும்

பட்டினியால் ஒரு மனிதன்

மாண்ட கதை சொல்வாயோ?


அத்தனைக்கும் நேர் நின்றார்

ஏர் பிடித்தும் போர் செய்தார்

வெட்ட வெட்ட கடலோடி

திரவியங்கள் தேடிவந்தும்

பஞ்சத்தின் தடை உடைத்தார்

போரினிலே நிமிர்ந்து நின்று

பூமிக்கோர் புதிரானார்

நேரினிலே தோற்ற பகை

நரித்திட்டம் வகுத்திட்டான்

ஒரு கூட்டை எரிப்பதற்கு

உலகத்தின் படை அழைத்தான்

தலையணை மந்திரத்தால்

தரணியார் கணை குவித்தார்

நெறி கெட்ட ஒரு சிலரை

தன் பக்கம் வளைத்திட்டான்

உலகமே பார்த்து நிற்க

புல்லில்லா சுடு மணலில்

பட்டிணியால் போர் தொடுத்தார்

ஒரு வேளை கஞ்சிக்காய்

பலவேளை காத்து நின்று

எறிகணையால் பலர் மாண்டார்

கைகளை பின்கட்டி

கைமேலே கல் கட்டி

நீச்சல் போட்டி வைத்து

நீருக்குள் தள்ளி விட்டு

நிறுவனங்கள் ஓடிவிட்டார்

நீதி கெட்ட உலகத்தின்

நெறி கெட்ட வெற்றியது

ஓடுபாதை முத்தத்தை

தனியொருவர் ஏன் கொடுத்தார்

உதவிய உலகத்தார்

ஒன்றாகி வந்திடுங்கோ

விசில் ஊதப்போகிறேன்

விழுந்து கும்பிடுங்கோ

விழுமியங்கள் செத்தாச்சு..

Sunday, February 14, 2010

அப்பா நான் சாவேனா....



அந்த நாட்கள் என் நெஞ்சைவிட்டுப் போகவில்லை நான் மரணிக்கும் வரை என்னுடன் நீங்காமல் நிழலாடப்போகிறதா? எனக்கே தெரியவில்லை. ஆம் அவை வன்னியின் இறுதி நாட்கள்.

2009,சித்திரை மாதம் ஒர் அடி நிலம் கூட இடைவெளி இன்றி வெட்ட வெளிகளிலும்,மரங்களின் கீழும் படங்குகளிலும் எம் உறவுகள் பசி பட்டிணி,நோய்பிணி,மரண ஒலங்களுடன் களித்த கரிநாட்கள்.

என் நாட்குறிப்பின் ஒருபக்கத்தை மட்டும் இன்று திறக்கின்றேன்,உங்களுக்காக இது கற்பனை அல்ல என் உயிரில் கலந்த உண்மைகள்.இவை தொடரும்....

அது கடலலை தாலட்டும் மாத்தளன் கடலோரம், லட்சக்கணக்கான மக்களுடன் அன்ரன் அண்ணனின் குடும்பமும் சிறிய படங்குக்குள் முடங்கிக்கிடந்தது.மூத்த பெண்பிள்ளைகள் தவிர ஆசையான கடைசி ஒரே மகன் வயது பத்திருக்கும்.குடும்பமே அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.சாதாரண நாட்க்களில் கூட பள்ளிக்கூடம் விட்டதும் மகனை சயிக்கிளில் ஏற்றியே திரிவார், அவ்வளவு கவனம்.

இப் பெண்பிள்ளைகளை எல்லாம் கரைசேற்க்கும் தோணியும் இவனே.

அவன் சிறுவன்தான், அவன் மனமோ அகன்றவானம், தன் தந்தை குடும்பத்தைக் காப்பாற்றப்படும்பாட்டை உணர்ந்து தனக்குள்ளேயே ஒரு கற்பனையை வளர்த்ததுடன் சகோதரிகளைசுற்றி இருத்தி, எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வான்.

வெறும் மணல் தரை, எல்லோரைப் போலவே இவர்களும் பூனை மண்ணைக்கிளறுவதைப்போல் மண்ணைக் கிளறி, அதன் மேல் படங்கைக் கட்டி, அதனுள் படுத்துக் கிடந்து உயிர்காக்கத் துடித்தனர்.ஆனால் அதனுள் குண்டு வீழ்ந்து துடிதுடித்து மடிந்தவர் கதைகளே அதிகம்.இப்படித்தான் இவர்களின் குடும்பமும் நாட்களைக் களித்தது.என்னதான் நடந்தாலும் குடிநீருக்கும் குளிப்பதற்கும் மலசலத்துக்கும் இதர அவசிய தேவைகட்கும், வெளியில் வந்துவிட்டு ஒடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில்தான் ஆயிரம் எண்ண்ம் சுமந்த அந்தச்சிறுபிஞ்சு, வெளிவந்து மீண்டும் வளைக்குள் போகுமுன்னர்,தூரத்து வேட்டொலிகள் அவனருகாக சீறிப்பாய்து போனது.

குப்புறவீழ்ந்து நிலையெடுத்தும்,இரக்கமற்ற அந்த ரவை அவன் மார்பில் பாய்ந்தது. துடிதுடித்து அலறிய தன்மகனை, இரத்தம் தோய்ந்த தன்னுயிரை, தாவியணைத்தவாறு மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டோடுகின்றார் தந்தை. எங்கிருந்தோ வந்தநானும் இதில் இணைந்து கொண்டேன், நானும் ஒடினேன், அந்தப்பிஞ்சு உதடுகள் ஏதோ முனகியது,இதை எழுதுவதற்கு என் கை நடுங்குவதை உணர்கிறேன். ஆம், இயேசுவின் சிலுவைச்சாவை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்,அவரும் பாடுபடுவதற்கு முன் தன் தந்தையிடம் மன்றாடிக்கேட்டர்.முடியுமனால் இத்துன்பக்கலத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு. ஆனாலும் முடியவில்லை.மூன்றுநாட்கள் சிலுவை சுமந்தார்,மரித்தார், உயிர்த்தார்.அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் உலகத்தை ஆட்கொண்டு,வியாபித்துள்ளது.கோடான கோடி மக்கள் தொழுகின்ற உயிர்வாழும் கடவுளவர்.இயேசுவைத் தொழும் இந்தச்சிறுவனும், ஒரு சிறிய இயேசுவாக மன்னாரிலிருந்து, மாத்தளன்வரை சிலுவையைச் சுமந்தான் அந்த மகன் தன் தந்தையிடம், இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கேட்க்கிறான்


"அப்பா நான் சாவேனா?.. அப்பா நான் சாவேனா?.. என்னை சாகவிடாதேங்கோ.. சாகவிடாதேங்கோ..அம்மா எங்க?அக்கா எங்க?"


ஆறாய்ப்பெருகும் கண்ணீருடன்


"இல்லை மகனே, இல்லை மகனே நீ சாகமாட்டாய், சாகவிடமாட்டேன்,என் பிள்ளைக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை"


அந்தப் புளியமரத்தடியில்,தரப்பாலில் கிடத்தினோம். எங்கும் மனித ஓலங்கள்,மரணத்துடன் போராடுபவர்கள் ஒருபுறம்,மரணித்துப்போனவர்கள் மறுபுறம், உடனும் தியேட்டருக்குள் கொண்டுசென்றார்கள் சற்று நிம்மதி, ஆனாலும் மனம் நடுங்கியது. கதறியழும் குடும்பத்தை கதறும் மனிதர்களே தேற்றுகிறார்கள்.மயக்கமருந்தில்லை,விறைக்கஊசியில்லை,

பிராணவாயுவில்லை.ஓய்வின்றி உறக்கமின்றி ஊனின்றி படாத பாடுபடும் வைத்தியர்கள் ஊளியர்கள் தொண்டர்கள். இப்போது அவன் குரலில் ஓசையில்லை கன்னங்களில் கண்ணீர் மட்டும். மருந்தில்லாத மருத்துவமனையில்,நிபுணர் இருந்தென்ன ம்ருத்துவர் இருந்தென்ன. முக்கால்வாசிப்பேர் மருந்தின்றி இறந்தகதை , யாபேரும் அறிந்ததே.அந்த வரிசையில் அவனும் இணைந்தான். என்மனமோ ஏற்க்க மறுக்கிறது,

ஆம் அந்த வண்டில் வாசலால் வெளிவந்து அதே தேமா மரத்தடியில் வரிசையில் கிடக்கும் உடல்களுடன் அடுக்கப்படுகிறது.

அவன் இறந்துவிட்டான் என் மனம் உணர்ந்தது ஆயிரம் ஈட்டிகள் என்மார்பில் ஒன்றாகப் பாய்ந்த வேதனை.


இந்தப் பிஞ்சு இயேசு மீண்டும் உயிர்ப்பானா???


தன் அப்பா அம்மா அக்கா உறவுகளுக்கு காட்ச்சி கொடுப்பானா?


இல்லைக் காப்பானா?


இவனின் கதையும் காவியமாகுமா?


என் மனதோரம் ஏராளம் கேள்விகள். சடங்குகள் ஏதுமின்றி சூடாறுமுன்மணலில் புதைக்கவேண்டும். தயாராகும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்.


இவன் செய்த பாவம்தான் என்ன??


மனித நேயம் பேசும்,அவர்தம் உரிமை பேசும் ஆயிரம் நிறுவனங்களால் பயனென்ன?


ஆனாலும் அந்த சிறிய உதடுகளின் கடைசி வார்த்தைகள் மட்டும் இன்னும் என் காதில் நித்தமும் ஒலிக்கிறது.



"அப்பா நான் சாவேனா.....அப்பா நான் சாவேனா..."

Saturday, February 13, 2010

புதிதாய் முளைக்கிறார் புத்தர்


கருணையின் வடிவைக் காட்டியே நின்றவர்

போதி மரத்தடியில் ஞானத்தைப் பெற்றவர்

கொல்லாமை என்பதை கூவியே சொன்னவர்

பல கோடி மக்கள் தொழுகின்ற கடவுள்-புத்தன்


ஆயிரம் மார்க்கங்கள் அவனியில் இருந்தாலும்

கருணைக்கு ஈடாக பௌத்தம் போல் பாரிலில்லை

கொல்லாமை தொடக்கம் கள் உண்ணாமை வரை

மனித மாண்பு பல மலை போல அதிலிருந்தும்

அவை மறைந்து பல நாளாச்சு மரணித்து போயாச்சு


சித்தாத்தர் எனும் புத்தனின் பிள்ளைகள்

புத்தரை மறந்தார் அவர் தம் போதனை துறந்தார்

நித்தமும் உயிகளைக் கொத்தியே தின்றார்

வற்றாத வெறியுடன் வாழுடன் நின்றார்


சித்தாத்தர் பாவம் கல்லாகிப்போனாரோ?

உட்கார்ந்த இடத்தில் ஊரை பிடிப்பாரோ?

இல்லைஉலகினை ஏமாற்றி உதிரம் குடிப்பாரோ?

வளம் பல வழிந்தோடும் வன்னிப் பெருநிலமே

வந்தோரை வரவேற்று வாழ வழி தந்தவள் நீ


பண்பாடு மொழியெல்லாம் பாழ்பட்டுப் போனவேளை

பக்குவமாய் காத்ததனை பறைசாற்றி நின்றவளே

வலிகள் பல சுமந்தும் வணங்காத மண்ணாகி

வரலாற்றுப் பொன்னேட்டில் நீ வாழ்வாய் எப்போதும்


சிட்டுக்குருவியின் சிறப்பான ஒரு கூட்டை

வசந்த காலத்தின் வடிவான பெருவாழ்வை

உலகமே ஒன்றாகி உலையில் போட்டதம்மா

மானிட மாண்புகளும் மனித உரிமைகளும்

மலிவென இங்கிருந்தும் மரணித்துப் போனதம்மா


நீரில் தத்தளிக்கும் ஓர் நாயை மீட்பதற்கு

கெலிகெப்ரர் உதவியுடன் நயமான நடவடிக்கை

எலிபிடிக்கப் போன பூனை குழாயில் சிக்கியதாய்

பூனையை பிடிப்பதற்கு புதிரான நடவடிக்கை

நேற்றைய தொலைக்காட்சி நேரடிச்செய்தியது


சொந்த மண்ணில்லை,சொந்தங்கள் உறவில்லை

துன்பத்தில் வீழ்ந்தோமடா சிலுவயைச் சுமந்தோமடா

பொட்டு வைத்து பார்த்த எம் இளம் பெண்கள் எல்லாம்

வெட்டை வெளியில் அரை குறையாய் குளிக்கின்றார்

முட்கம்பி வேலிக்குள் முடங்கிய எம் வாழ்வில்

வேலிகள் பயிரை மேய்ந்த கதை இது


காவல் அரண்களில் கயவரின் கூக்குரல்கள்

கூக்குரல் நடுவே எமக்கொரு கொட்டில்

பார்த்து ஒதுங்கிட பள்ளிகள் இல்லை

பயந்து ஒதுங்கிட கோவில்கள் இல்லை

எல்லாம் இங்கே இடிந்த சுடுகாடாய்


புத்தனின் சிலை மட்டும் புதிதாய் முளைக்கிறது

குடிநீர் கிணறெல்லாம் சவக்குழி ஆனதினால்

நீரினைப்பெற்றிட வரிசையில் நிற்கிறோம்

சவக்குழி படலம் இன்னும் தொடர்கிறது


புரியாத மொழி பேசும் அறியாத அன்னியர்கள்

புதிதாக வாணிபம் புரிக்கின்றான் என் மண்ணில்

அம்மனும்,சிவனும், அல்லாவும் யேசுவும்

அகதிகள் ஆனதினால் அலைந்து திரிகின்றார்


இம்மட்டு நாளும் உறங்கிய சித்தாத்தர்

ஆக்கிரமிப்பாளனாய் அமர்கின்றார் எம் மண்ணில்

நாய்க்கும் பூனைக்கும் வாய்த்த வாழ்க்கை கூட

நாகரிக உலகில் நமக்கில்லை பாருங்கோ.....!

yasmin lawsuit