Monday, March 29, 2010

அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்களும் ,அடிமைகளாகும் ஈழத்தமிழர்களும்--ஓர் ஆய்வு

இஸ்ரவேல் மக்களின் பலநூறு ஆண்டுகால அடிமை வாழ்வைப் பற்றியும்அதிலிருந்து அவர்கள் மீண்ட விதத்தை பற்றியும் அறிவதற்கு நிச்சயமாக விவிலியத்தினுள் செல்ல வேண்டும்.எகிப்தின் அடிமைத்தனத்தின்கீழ் கொடுமையான அடிமை வாழ்வை அனுபவித்த இம்மக்களின் விடுதலைப்பயணம் மிக நீண்டது.அந்த வரலாற்றுச்சம்பவங்களில் ஒரு சிறிய சம்பவத்தை மட்டும் தமிழர்களின் இன்றைய ஒடுக்கப்பட்டஅடிமை வாழ்வுடன் ஒப்பிட்டு அதில் எழும் கேள்விக்கான சரியான விடையினைப் பெறுவதினூடாக ஈழத்தமிழரின் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்வை விடுதலை வாழ்வாக மாற்றமுடியும் என நம்புகின்றேன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் கடவுள் உலக வாழ்வில் போராடும் மக்களை வழிநடத்துவதற்காக ஒருவரை தெரிந்தெடுப்பதை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்கிறோம். அல்லவா? அதே போலத்தான் இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதற்காக தேர்ந்தெடுத்தவர்களில் "மோசே" என்பவரும் அவரின் பின்வந்த "ஜோசுவா" என்பவரின் வரலாற்றையும் தாயகத்திலும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் இன்று அறிந்திருப்பது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் ஜோசுவாவின் சம்பவம் ஒன்றையே நான் ஒப்பிட விளைகிறேன்.இந்தக்காலம் போலல்லாமல் ஆதிகாலத்தில் மனிதர்களுடன் கடவுள் பேசியதையும், நேரடியாக கதைத்து உறவாடியதையும் பல மார்க்கங்களில் நாம் வாசித்து அறிகின்றோம். அந்த வகையில் முகமுகமாக பார்த்து பேசிய பெருமையும் வழிநடத்திய பெருமையும் கிறீஸ்தவத்தில் மோசேக்கே சேரும்.மோசே தனது நூற்றியிருபதாவது வயதில் "மோவாப்" தேசத்தில் மரித்ததைத்தொடர்ந்து அடிமைப்பட்ட இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை கடவுள் யோசுவா என்பவருக்கு வழங்கினார். யோசுவாவின் காலத்தில் நடந்த அழகான சம்பவம் ஒன்று தமிழ்மக்களுக்கு முக்கியமான ஓர் பாடமாக இருக்கும் என எண்ணுகிறேன்.உண்மையில் வரலாறு மனித குலத்துக்கு வழிகாட்டிச் செல்வதையும் அது மீண்டும் மீண்டும் பிறப்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. மோசேயின் காலத்தைப் போன்றே "யேசுவா"வும் தன் மக்களை வழிநடத்திச்செல்கையில் பல போர்களை ச்சந்தித்தார்.தமக்கு எதிராக வந்த அத்தனை பேர்களையும், கடவுளின் வழிநடத்தலுடன் அழித்தொழித்து பிரதேசங்களை படிப்படியாக மீட்டார் .ஈழத்தமிழர்கள் பெற்றிருந்த வெற்றியைப் போன்று.ஆனால் இஸ்ரவேலர் கானானியரையும் ,ஏத்தியரையும்,ஏவியரையும் ,பெரிசியரையும், கிர்காசியரையும், ஏமோரியரையும்,எபூசியரையும் . துரத்தியும் முறிய அடித்தும் பயணித்துப் போராடி வென்றார்கள். இந்த நீண்ட பயணத்தின் போது யேசுவாவும்,இஸ்ரவேல் மக்களும் "எரிகோ" எனும் பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக சீத்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி யோர்தான் கடந்து செல்லவேண்டியிருந்தது.இந்த நதியைக் கடக்கும்போது கூட மோசே செங்கடலைப்பிரித்து மக்களை அழைத்துச்சென்றதைப் போன்று கடவுள் நதியை ஓடாமல் நிறுத்தி வைத்து அதை வற்றவைத்த பின்பு இவர்கள் கடந்ததாகவும் இதன் அடையாளமாக பன்னிரண்டு கற்கள் "கிக்கால்"எனும் இடத்தில் நாட்டப்பட்டுள்ளதையும் இன்றும் காணலாம். தமக்கு எதிரான எரிகோவை கைப்பற்றுவதற்காக ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் யுத்த சன்னத்தராய் போனார்கள்.

இங்குதான் முக்கியமான ஒன்றை நோக்கவேண்டியுள்ளது.அதாவது இந்தப் பட்டணத்தைக் அழிக்கும் போது இதிலுள்ள எப்பொருளையும் ,களவாடவோ சூறையாடவோ கூடாதென கடவுள் யோசுவா ஊடாக கட்டளை கொடுத்திருந்தார்.கடவுளின் கட்டளைப்படி யோசுவா வழிநடத்திய மக்கள் இந்தப் பட்டணத்தைக் கைப்பற்றி முழுமையாக தீக்கிரையாக்கினார்கள்.இங்கே இஸ்ரவேல் வேவுக்காரர் இருவருக்கு உதவி செய்த "ராகாப்" எனும் வேசி ஒருத்தியின் குடும்பம் தவிர எல்லாமே தீக்கிரையாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு தவறு நடந்தது.ஆம் போரில் ஈடுபட்ட வீரர்களில் "ஆகான்"என்பவன் தன் தலைவன் கட்டளையை மீறி கொள்ளைப் பொருட்களில் ஆசைப்பட்டு சிலவற்றை தனது சுயநலத்திற்காக எடுத்திருந்தான். இப்போரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேனுக்கு கிழக்கேயுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற "ஆயி" பட்டணத்தைக் கைப்பற்ற எண்ணி அதை வேவு பார்பதற்காக ஆட்களை அனுப்பினார்.வேவுக்காரர் திரும்பி வந்து நமது ஜனங்கள் எல்லோரும் போக வேண்டியதில்லை.ஏறக்குறைய இரண்டாயிரம் ,மூவாயிரம்பேர் போய் அயியை முறிய அடித்துவிடலாம்.அவர்கள் கொஞ்சப் பேர்தான் என்றனர்.அப்படியே ஏறக்குறைய மூவாயிரம் பேர் அங்கே போருக்கு போனார்கள்.ஆனாலும் அவர்கள் "ஆயியின்"மனுசருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.செரீம் மட்டும் துரத்தி வந்த அவர்கள் மலையிறக்கத்திலே இஸ்ராயேலரை வெட்டினார்கள்.இதனால் இஸ்ராயேல் ஜனங்களின் மனங்கள் கரைந்து தண்ணீராய்ப் போயிற்று.கடவுளை நம்பியிருந்த"யோசுவா"மனம் உடைந்தவராக தன் வஸ்திரங்களை கிளித்துக்கொண்டு கடவுளின் உடன்படிக்கைபெட்டிக்கு முன்பாக முகம் குப்புற வீழ்ந்து கிடந்து புழுதியைத்தலையில் கொட்டி அழுதார்.அப்போது கடவுள் யோசுவாவை நோக்கி எழுந்திரு நீ இப்படி முகம் குப்புற வீழ்ந்து கிடப்பது என்ன? இஸ்ரவேலர்கள் பாவம் செய்தார்கள் நான் கட்டளை இட்டதை மீறி பொருட்களுக்கு ஆசைப் பட்டு கொள்ளையிட்டார்கள் அதனால் தங்கள் எதிரிக்கு முன்பு நிற்கக்கூடாமல் புறமுதுகு காடினார்கள் என்றார். எனவே சாபத்தீட்டானவர்களை உங்கள் நடுவிலிருந்து எரிக்காவிட்டால் இனி நான் உங்களோடு இரேன் என்றார் கடவுள்.(யோசுவா. 7:11 :12)

அத்துடன் இச்செயலைச் செய்தவர்களும், அவனுக்குள்ள யாவும், அக்கினியில் சுட்டெரிக்கக் கடவது என்றார். இதன்படியே யோசுவா மறுநாள் எல்லா வம்சங்களையும், தனக்கு முன்பாக வரப்பண்ணி, விசாரணை குறிக்கப்பட்டு, "ஆகான்" செய்த மதிகேடான காரியமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்பதனைக் கண்டறிந்தான்.அவன் பூமிக்குள் புதைத்து வைத்திருந்த,அந்தக் களவாடிய பொருட்களையும், ஆகானையும்,அவன் குமாரரையும், குமாரத்திகளையும்,அவனது கால் நடைகள் உள்ளிட்ட அவனுக்குண்டான யாவற்றையும், யோசுவாயும் இஸ்ராயேலரும் கூட ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய், அவன்மேல் கல்லெறிந்து,அவைகளை அக்கினியில் சுட்டெரித்து,கற்குவியலைக் குவித்தனர்.ஆகையால் அந்த இடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.(யோசு. 7:24-26). தம்மத்தியில் தமக்கு எதிராக துரோகத்தனம் புரிந்த, தம் தலைவனின் கட்டளைக்கு எதிராகச் செயற்பட்ட அல்லது தனது சுயநலத்துக்காக செயற்பட்ட "ஆகானை" இஸ்ராயேல் மக்கள் அன்று இனம் கண்டு தம்மத்தியிலிருந்து வேருடன் பிடுங்கி சுட்டெரித்ததன் பின்னர் தாம் தோற்றுப்போய் பின்வாங்கி ஓடிய ஆயின் பட்டணத்தின்மேல் மீண்டும் படையெடுத்து, முளுமையான ஓர் வெற்றியைப் பெற்றனர். இப்படியாக தமக்கு கடவுள் வாக்களித்த தேசத்தை மீட்டனர் என்பதே வரலார்று.
அக்காலத்தில் தெய்வங்கள் நேரில் நின்று தாமே போராடி தீயவர்களை அழித்துள்ளதை பல மார்க்கங்களிலும் காணலாம். எடுத்துக்காட்டாக முருகப் பெருமான் சூரனுடன் போர் செய்து அவனை வீழ்த்தியதையும் நாமறிவோம்.இன்று அப்படியில்லையே என சிலர் சிந்திக்கலாம், ஆனால் அதுவல்ல முக்கியம்.அதற்காக வாதாடுவதும் எனது நோக்கமல்ல,நேரயாடிக போர் செய்யாவிடினும், அதற்குச் சமமான மாபெரும் ஆற்றலை,பகுத்தறிவை விழிப்புணர்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அற்புதமாக வழிகாட்டி நிற்கும் வரலாற்றையும் கடவுள் மனித குலத்துக்குக் கொடுத்துள்ளார். இது ஒன்றே வெல்வதற்குப் போதுமனதாகும்.



பல தசாப்தங்களாக அடிமைப் பட்டிருந்த தமிழினத்தின்,அடிமை விலங்கினை உடைப்பதற்காக தமிழ் இனத்தின் மத்தியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்குமுன் தலைவனாகத் தோன்றிய ஒருவர் தன் மக்களை வழிநடத்தி இஸ்ராயேல் மக்கள் பெற்ற அதே போன்ற தொடர் வெற்றிகளை ஈட்டி, வளம் நிறைந்த, பாலும் தேனும் வழிந்தோடும் தாயகப் பிரதேசத்தை மீட்டு தமிழினம் அன்னியத் தலையீடின்றி சுதந்திரமாக வாழ்ந்து வந்தது.அங்கு சாதீயமோ, மதப்பிளவுபாடோ, அச்சமோ இருந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ராயேலருக்கு "ஆகான்"என்பவனைப் போல் தமிழ் இனத்துக்கும் பற்பல துரோகிகள் தம் இனத்துக்குள்ளிருந்தே உருவானார்கள், இதனால் இஸ்ராயேலருக்கு "ஆயிலில்"நடந்ததைப்போன்று இங்கும் தோல்வியைச் சந்தித்தனர். ஆனால் அந்த மக்களோ, தம் துரோகிகளையும் சுயநலக் காரர்களையும்,கல்லால் எறிந்து சுட்டெரித்தார்கள்.அடியோடு ஓழித்தார்க்ள் இதனால் தமக்கான நாட்டை அவர்கள் மீட்ட வரலாற்றுப் பாடத்தில் நின்று கொண்டு,தமிழர்கள் நன்றாகச் சிந்தித்தால்,அவர்களின் தோல்விக்குக் காரணம் பல இருப்பினும், முக்கியமானது, எதிரிக்குத் துணை போனதும்,ஓரணியில் ஒன்று படாமையும்,சுயனலத்துக்காக சிலர் செயற் பட்டதையும் குறிப்பிடலாம். எனவே இந்த மூன்று விடயத்தையும் ஒழித்து விட்டால் தமிழ் இனம் தம் தாயகத்தை நிச்சயம் அமைக்கலாம்.மேற்குறிப்பிட்டவர்களை வேருடன் பிடுங்கி தீயில் போடுவதற்கும் கல் எறிவதற்குமான மிக அருமையான, அற்புதமான ஓர் சந்தர்ப்பத்தை இப்பொழுது வரலாறு தமிழர்களுக்கு வழங்கிப் பார்த்து நிற்கிறது.அதுதான் நடக்கப்ப்போகும் "தேர்தல்." நான் மேலே குறிப்பிட்டதைப் போல் உங்களிடமுள்ள அற்புதமான பகுத்தறிவைப்பாவித்து,விடுதலைக்காக வித்தானவர்களையும் அதன்பால் உயிர் நீத்தவர்களையும் நினைந்து தூரனோக்குடன் சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாசல் தேடி வந்து நிற்கும் மேற்சொன்ன மூன்று வகையனவர்களையும் ஒழித்துவடுங்கள். நான் அரசியல் சாக்கடையில் விழாதவன்,ஆனால் அரசியலையும் வரலாற்றையும் படித்திருக்கிறேன்.போரில் வென்றலும்கூட இன்றைய உலக ஒழுங்கில் தேர்தல் மூலமான மக்களின் வாக்களிப்பே இறுதி முடிவாகவுள்ளதை நீங்களும் அறிவீர்கள்.முகத்துக்கோ, உறவுக்கோ, முன்னுரிமை கொடுப்பதைத் த்விர்த்து, எதிர்காலத்தை மட்டும் கருதி செயற்படுங்கள்,ஒற்றுமையை நிலை நாட்டுங்கள் கடவுளின் வரலாற்றினூடாகப் பேசினேன் இது தவறினால் தாயகம் முழுவதும் சிங்களவர் மயமாகும்.இப்போதே அடிமரத்தில் கோடாரி வைக்கப்பட்டுள்ளது, காலம் காத்திருப்பதில்லை , அது கடந்துவிட்டால் கடுகளவும் பயனில்லை.




......

Saturday, March 13, 2010

உயிர் காத்த உயிர் மரங்கள்




மனிதனை மனிதன் மரமெனத்திட்டுவான்

உணர்ந்தும் புரிந்தும் மறுபடி திட்டுவான்

மாஜம் மனிதனே மரித்திடும் உடலமே

மரமது மேலடா உன் மனதிலும் உயர்வடா

உன் கண்களை மூடி மூச்சினை இழுத்து

மனதினை திறந்து ஒரு முறை பார்

ஒருவனை ஒருவன் ஒழித்திட நினைப்பான்

வன்முறை தூக்கி வாழ்வினை அழிப்பான்

முந்தினோன் வாழ்வான் பிந்தினோன் வீழ்வான்

சமனிலை குழப்பி சாவினைக் கொடுப்பான்


உன் ஒவ்வொரு மூச்சும் மரத்தின் பிச்சை

மரங்களின் நன்மை புரிந்துவிடு

இயற்கையின் அன்பு தெரிந்துவிடும்-உன்

முந்தையர் முகத்தினை கண்டறிவாயோ

அறியேன் என்பாய் ஆவலில் துடிப்பாய்

முற்றத்தின் நடுவில் வேம்பினைப் பார்

வயலோர வெளிகளில் பனைகளைப் பார்

அம்மன் கோவிலின் ஆலினைப்பார்

ஆண்டவர் கோவிலின் மரங்களைப் பார்

ஆச்சியின் கோடிப் புளியினைப் பார்-நம்

முந்தையர் நட்டவை நிமிர்ந்து நிற்பவை

அத்தனை மரமும் முந்தையர் முகமே


உவர் நீரை ஊற்றினும்-அதை

இளநீராய் தரும் மனம்-நாம்

புசிக்கக் கனியாய் கடிக்கக் காயாய்

குடிக்கப் பாகாய் படுக்கப் பாயாய்

வசிக்க வீடாய் வாழ நிழலாய்

நோய் தீர்க்க அரு மருந்தாய் -எத்தனை

நூற்றாண்டாய் நிழலாயகி நின்றிடுவாய்

அழகு தேவதையே மயக்கும் பூமணமே

ஆயிரம் ஏசிகள் அவனியில் வந்தாலும்

ஆலுக்கும் வேம்க்கும் அது ஈடாகுமோ


வெட்ட வெளியிலே குண்டு மழையிலே

நித்தம் நனைந்தவர் நிர்மூலமானவர்

கத்தி மடிந்தவர் கத்தாமல் மாண்வர்

அக்கம் பக்க அல்லோலம் பார்த்து

தன்னுயிர் காத்திட மனிதரோ ஓடினார்

காலை நின்றவர் மாலை மாறினார்

மாலை நின்றவர் காலை வாரினார்

அன்பு மரங்களே அசையாமல் நின்றீர்

நெஞ்சில் ரவையேந்தி உடலில் கணையேந்தி

போராளிமனமாகி தியாகங்கள் புரிந்திட்டாய்

உயிர் காத்த உயிர் மரமே -பச்சையாய்

உனைத் தறிக்க மனமில்லை கண்கணியே

முட்டியுடன் வீழ்த்தினோமே பெண்மணியை

பாளைக்கு பொன்போட்டுப் பொங்கலிட்டு -அது

இளநீராய் ஆகுமுன்பே கண்ணீரைப் பரிசளித்தோம்

அழுதழுது உனைத் தறித்து-நாம்

அதனால்த்தான் உயிர் பிழைத்தோம்

யேசுவுக்கு நீ சிலுவை

எங்களுக்கு நீ யேசு

கட்டியணத்து முத்தமிட நீயில்லை

இயற்கையும் இறைவன் தான்

கடவுளின் சாயல் தான்

கோழியின் இறக்கைகள்-என்றும்

குஞ்சுக்கு காப்பாகும்

மரங்களின் உடல்களே

எங்களின் உயிர் காப்பு

பனை மரமே பனைமரமே நீயெங்கே

உயிர் காத்த உயிர் மரமே நீயெங்கே

எமை மூடி நீகிடந்தாய் -நன்றியம்மா

கணையேந்தி உடல் பிளந்தாய் நன்றியம்மா

எமைக்காத்து நீ மரித்தாய் நன்றியம்மா

இது கவியல்ல கவியல்ல

கண்ணீரின் ஓர் கோரல்

ஊரெங்கும் மரம் நடுவோம்

உணர்வோடு வளர்த்தெடுப்போம்

yasmin lawsuit